சனி, 21 மார்ச், 2015

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

நல்ல ரத்த உற்பத்திக்கும், ரத்த சுத்திகரிப்புக்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது புதினாக்கீரை. ஒரு வகையான
நல்ல மணமுடைய இந்தக்கீரையை மணத்துக்காகவும் சுவைக்காகவும் குழம்புகளில் சேர்ப்பதுண்டு. புதினாக்கீரையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் பலவிதமான வயிற்றுக்கோளாறுகள் அகலும். கடுமையான வயிற்றுபோக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு.
கர்ப்பிணிபெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் புதினாவை பயன்படுத்துவது உண்டு. பழுப்பு சர்க்கரையுடன் காடி சேர்த்து பாகாகக் காய்ச்சி அதனுடன் புதினா இலைச் சாற்றை கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி வாந்தி ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாகில் இரண்டொரு துளி நாக்கில் விட்டு சப்பச்செய்தால் வாந்தி நின்று குணம் தெரியும்.
புதினாக்கீரையை கஷாயம் செய்தும் பயன்படுத்தலாம். புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.
வல்லாரை புதினா சாதம்
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை-சிறியகட்டு
புதினா-1கட்டு
புளி- பாக்கு அளவு
காய்ந்தமிளகாய்-6
கடுகு-2டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டீஸ்பூன்
எண்ணெய்- 2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எப்படி சமைப்பது?
புதினா வல்லாரை கீரைகளை உதிர்த்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, மூன்றையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு புளி, உப்பு, புதினா வல்லாரைக்கீரைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். சூடான சாதத்தோடு இந்த விழுதைக் கலந்து விட்டால் சுவையான ருசியான வல்லாரை புதினா சாதம் தயார். உப்பு, புளி உரைப்போடு கூடிய இந்த சாதத்துக்கு தொட்டுகொள்ள மொறுமொறு வத்தல் பொரித்துக்கொண்டால் பிரமாதமாக இருக்கும்
புதினா வல்லாரைகீரையின் பயன்கள்
ருசியின்மை, வாந்தி, மற்றும் உஷ்ண நோய்களை தீர்க்கும். வாயு பிரச்சனைகளை போக்கும். மலச்சிக்கல் அகற்றும். நினைவாற்றலுக்கு அதிக விசேஷமான கீரையாகும்.