புதன், 27 மார்ச், 2013

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்....




இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

வேம்பு புங்கன் கரைசல் :

தேவையான பொருட்கள் :-
வேப்பெண்ணை ஒரு லிட்டர்
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர்
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

மீன் அமினோ கரைசல் :

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும்
21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

பழக்காடி கரைசல்

தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.


தேமோர் கரைசல்

புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்

பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்..

நன்றி - விகடன்

இந்தியாவில் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்.....




இந்தியாவில் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்............!!

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம் :

உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவையை அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22ம் தேதி சர்வதேச தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது தண்ணீர் ஒத்துழைப்புக்கான கோஷங்களை முன்வைத்து பிரசார இயக்கங்களும் நடத்தப்படவுள்ளன.

தண்ணீர் மரணங்கள் :

ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.

சுகாதாரமான தண்ணீர் :

ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு. உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

பசிக்கொடுமை அதிகமாகும் :

தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம் :

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

கடலில் கலக்கும் வெள்ளநீர் :

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

அணை கட்டுவதில் அக்கறை :

கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க புதிய அணைகள் கட்டுவதில் மத்திய அரசுக்கும் போதிய அக்கறை இல்லை. இதைப் பற்றி மத்திய பட்ஜெட்டிலோ, மாநில பட்ஜெட்டிலோ சரியான அறிவிப்பு இல்லை.

2025 ல் தண்ணீர் பிரச்சினை :

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள் :

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு :

இஸ்ரேல் நாட்டில் தொழிற்சாலை, வீடுகள் ஆகியவற்றில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதே நிலை இந்தியாவிலும் வர வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்டை மாநிலங்களால் பாதிப்பு :

தமிழ்நாட்டை பொருத்தவரை அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா ?

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

2070 தமிழகம் பாலைவனமாகும் :

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் அவசியம் :

தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். குளிப்பதற்கு துவைப்பதற்கு அளவான தண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம். வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது. வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம். மேலும் உலக வங்கி தலையிட்டு 1960ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி சிந்து, ஜீலம், செனாப் நதி தண்ணீர் பாகிஸ்தான்தானுக்கு.

கிழக்கு நோக்கி பாயும் சட்லெஜ், பியாஸ், ரவி நதிகள் இந்தியாவுக்கு என பகிர்ந்து கொள்ளப்பட்டது. சிந்து நதியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை இந்தியா மேற்கொள்ளலாம். ஆனால் 80 சதவீத தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய் சேரவேண்டும் என்பது ஒப்பந்தம். இதன்படி இன்று வரை இரு நாடுகளும் அச்சுபிசகாமல் நடந்து கொண்டுள்ளன.

திங்கள், 18 மார்ச், 2013

பிளாஷ்டிக் பைகளின் மறுசுழற்சி பயன்


பொதுவாக இன்று பிளாஷ்டிக்கால் ஆன பைகளை மட்டுமே நாமனைவரும் பயன்படுத்திடும் நிலையில் உள்ளோம் அதனால் நாம் அவைகளை பயன்படுத்தியவுடன் கண்ட இடத்தில் வீசிஎறிந்து விடுகின்றோம் இதனால் எங்கெங்கு நோக்கினும் பிளாஷ்டிக் பைகளானது குப்பையாக மலைபோல் குவிந்து போகின்றன அதனை கூட்டி பெருக்கி மாநாகராட்சி, நகராட்சிகளின் ஊழியர்கள் சாலையோரங்களில் குவியிலிட்டு எரியூட்டுகின்றனர் அவ்வாறு எரிப்பதால் நச்சுபுகை காற்றில் பரவி நம்முடைய உடல்நலனிற்கு கேடு விளைவிக்கின்றன.

தாம் வழக்கமாக உண்ணும் வைக்கோல் போன்ற பொருள் இதுஎன நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளை விழுங்கிடும் மாடுகள் அதனுடைய உணவுக்குழாய் அடைபட்டு ஏராளமான அளவில்இறந்து போகின்றன

நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளானது மழைக்காலத்தில் நிலத்திற்குள் தண்ணீர் ஊடுருவி செல்ல முடியாதவாறு தடுத்துவிடுதால் இம் மழைக்காலங்களில் வெள்ள பெருக்கும் பெருஞ்சேதமும் ஏற்படுகின்றன அதுமட்டுமன்றி இதன் தொடர்ச்சியாக மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி செல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நாமெல்லோரும் அல்லாட வேண்டிய நிலை ஏற்படவாய்ப்புள்ளது

இதுபோன்ற எண்ணற்ற தீங்குகள் நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளால் ஏற்படுவதால் நாம் இவைகளை தவிர்ப்பதற்கு முயற்சி செய்வோம் இல்லையெனில் அதனை சேகரித்து வைத்து பாதுகாப்பாக அப்புறபடுத்திட முயற்சி செய்திடுவோம் அதைவிட முதலில் இதற்கான விழிப்புணர்வாவது நம் அனைவரிடமும் ஏற்படுவதற்காக முயற்சி செய்வோம்

சமீபத்தில் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தம்முடைய தீர்ப்பில் பிளாஷ்டிக் பைகள் ஒரு அணுகுண்டு வெடிப்பதைவிட மிக அதிக தீங்கிழைப்பவையாக உள்ளன அதனால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையயையும் அதற்கு மாற்று ஏற்பாட்டினையும் செய்திடுக என உத்திரவிட்டுள்ளது

இந்த பிளாஷ்டிக் பைகளை பின்வரும் வழிகளில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன்மூலம் மேலேகூறிய தீங்களிலிருந்து நம்மை காத்திட முடியும்

1- மளிகை கடைகளில் கொள்முதல் செய்த பொருளைஎடுத்து வருவதற்காக நாம் மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போதெல்லாம் நம்மால் முன்பு பெறபட்ட பிளாஷ்டிக் பைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்திடுவது நல்லது

2- முன்பு நாம் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்காக பயன்படுத்திய பிளாஷ்டிக் பைகளை மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போது அம்மளிகை கடைகளுக்கே திரும்ப கொடுத்திடுவது அதனினும் நன்று

3- நம்முடைய வீட்டிலுள்ள கழிப்பறைகளில் ,அலுவகங்களை சுற்றி குப்பைகளை போடும் தொட்டியாக இதனை பயன்படுத்திடுக
4- சமையல் அறையில் பயன்படுத்தபடும் எளிதில் வீணாக்கூடிய காய்கறிபொருட்களை இந்த பிளாஷ்டிக் பைகளுக்குள் இட்டு குளிர்பதன பெட்டிக்குள் வைத்து பராமரித்திட பயன்படுத்திடுக

5- வீட்டின் முற்றத்தில் அல்லது புழக்கடை பகுதியில் இந்த பிளாஷ்டிக் பைகளை குப்பைத்தொட்டிபோன்று வைத்து பயன்படுத்திடுக.

6- நூலகங்களில் நூல்களை எடுத்து செல்லும் பைகளாக பயன்படுத்திடுமாறு நூலகங்களுக்கு இதனை நன்கொடையாக வழங்கிடுக

7- காலில் அணியும் முழுக்காலணியின் உள்பகுதியை பாதுகாத்திட இந்த பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்திடுக.

8- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னலால் ஆன பல்வகை கைப்பைகளாக உருவாக்கி பயன்படுத்தி கொள்க
9- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னல் செய்து அழகிய வகைவகையான பூவேலைப்பாடு செய்து பயன்படுத்திகொள்க

வியாழன், 7 மார்ச், 2013

நாம் தூக்கி எறியும் குப்பைகளின் மதிப்பு




தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்

பிளாஸ்டிக்கில் 'கடக்' பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 3 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.

நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 5 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.

சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.1500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.

பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 12 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.

தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.

பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.

பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.

அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.

அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.

தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.

வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.

ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.


குப்பைகளை தெருவில் போடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது...தவிர்ப்போம் !

சனி, 2 மார்ச், 2013

மண்புழு உரம்



வீட்டுத் தோட்டம்
-------------------------------

மண்புழு உரம் பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம்...உரம் தயாரிக்க தோட்டத்தில் இடம் இல்லாதவர்கள் மொட்டை மாடியில் வைத்தும் தயாரிக்கும் விதமாக தார்பாலின் ஷிட்டால் செய்யப்பட்ட படுகை கிடைகிறது.

இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது.

காற்று... படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.

மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்குமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.

கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.

தேவைபடுபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

மண் புழு உரம் எப்படி தயாரிப்பது குறித்த விவரங்கள் தேவை என்றால் விரைவில் பகிர்கிறோம்.

வீட்டுத் தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை புரிந்துகொள்ளுங்கள், இயன்றவரை காய்கறிகளை வீட்டில் பயிரிட முயற்சி செய்யுங்கள். இதனை குறித்த பதிவுகளை தொடர்ந்து இனி பகிர இருக்கிறோம். வீட்டுத்தோட்டம் என்பது ஆரோக்கியம் மறக்காதீர்கள் !! வாழ்த்துக்கள் !! 

வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க



வீட்டுத் தோட்டம் - தொட்டியில் எளிதாக செடி வளர்க்க
-----------------------------------------------------------------------------------------------

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். தேங்காய் உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

செய்முறை

மண் தொட்டியில் முதலில் தென்னை மட்டையை(3 pieces)நிரப்புங்கள்

பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.

மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்

போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள்

செடியை நடுங்கள்

அவ்வளவு தான். இரண்டு மூன்று நாள் வெளியூர் செல்ல வேண்டுமே, செடிகள் வாடிடுமே என்ற கவலை இனி வேண்டாம். இம்முறையில் செடியை நட்டு விடுங்கள், போதும்.

உற்சாகமான வீட்டுத் தோட்டத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள் !