புதன், 27 மார்ச், 2013

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்....




இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

வேம்பு புங்கன் கரைசல் :

தேவையான பொருட்கள் :-
வேப்பெண்ணை ஒரு லிட்டர்
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர்
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

மீன் அமினோ கரைசல் :

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும்
21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

பழக்காடி கரைசல்

தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.


தேமோர் கரைசல்

புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்

பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்..

நன்றி - விகடன்