பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கலாம். "எங்கே?' என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல... ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது.
அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்து, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக மாற்றுகிறது அந்நாடு.
இதன் மூலம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு, மின்சக்தி வழங்கப்படுகிறது.
குப்பைகள் போதவில்லை என்று, வெளிநாட்டிலிருந்து எட்டு லட்சம் டன், குப்பை கழிவுகளை, இறக்குமதி செய்கிறது. இதில், நார்வே நாடு தான், டன் டன்னாக குப்பையை ஏற்றுமதி செய்கிறது. அதே போல, மெக்ஸிகோ நாட்டில், இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றனர்.
மக்களிடமிருந்து, குப்பை, பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புட்டிகள் வாங்கப்படுகிறது. அதற்கு பதிலாக, காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். குப்பை பிரச்னையும் தீர்கிறது; மின்சாரமும் கிடைக்கிறது. நம் நாட்டிலும் இதைப் பின்பற்றினால், "கரன்ட் கட்' இருக்காதே!